பிச்சி பூ விலை கடும் உயர்வு
தோவாளை மார்க்கெட்டில் பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்தது. பிச்சி பூ கிலோரூ.2500-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
தோவாளை மார்க்கெட்டில் பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்தது. பிச்சி பூ கிலோரூ.2500-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது.
இங்கு கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்தும், குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்டத்தின் காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
பிச்சி ரூ.2,500
பூக்களின் வரவு, மக்களின் தேவைக்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்படும். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரூ.1,750-க்கு விற்பனையான பிச்சி பூ நேற்று ரூ.750 உயர்ந்து கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை ரூ.500 உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) பங்குனி உத்திரம் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கத்தால் பிச்சி பூ உற்பத்தி குறைந்தது. இதனால் மார்க்கெட்டுக்கு பிச்சிப்பூ குறைந்த அளவே வந்தது. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது என்றார்.
விலை விவரம்
தோவாளை மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளிப்பூ ரூ.200, மல்லிகை ரூ.800, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.50, சம்பங்கி ரூ.125, ரோஜா (100 எண்ணம்) ரூ.25, பட்டன்ரோஸ் ரூ.120, துளசி ரூ.60, தாமரை (100 எண்ணம்) ரூ.500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.80, மருக்கொழுந்து (கட்டு) ரூ.90, மஞ்சள்கேந்தி ரூ.45, மஞ்சள் சிவந்தி ரூ.160, வெள்ளை சிவந்தி ரூ.180, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.200 என விற்பனையானது.