திருத்தணியிலிருந்து சென்னைக்கு ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

திருத்தணியிலிருந்து சென்னைக்கு ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-18 13:59 GMT
வாகன சோதனை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி-சித்தூர் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலையில் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலிசார், மற்றும் திருத்தணி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக ஆர்.கே.பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

பறிமுதல்

இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுரேந்தர் (வயது20), ஆகாஷ்(19), மற்றும் ரெட்டில்ஸ் பகுதியை சேர்ந்த மைதீன்(21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சென்னையில் அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றது தெரிந்தது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலீஸ்வரன் கோவில் அருகே ஆந்திராவிற்கு கடத்த வைத்திருந்த 1 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்