வால்பாறை
வால்பாறை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்டேன்மோர் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த படகு இல்லம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும் அந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். படகு இல்லத்தில் கக்கன்காலனியில் இருந்து வரும் ஆற்று தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் ஆற்று தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளது. இது தவிர குப்பைகள் கொட்டப்படுகிறது.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டு உள்ள தண்ணீரில் ஆங்காங்கே கொக்குகள் செத்து மிதக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தாக்குதல் காரணமாக கொக்குகள் இறந்ததா? அல்லது வேறு ஏதோவது காரணமா? என்பது தெரியவில்லை. இதனால் அந்த பகுதிக்கு சென்று வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே கொக்குகள் இறந்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இறந்த கொக்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.