குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதை கடைகள் அகற்றம்
குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
குன்றத்தூர் பஜார் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பஜார் பகுதியில் சாலையோர கடைகளை அகற்றுவதற்கும் சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகளில் முகப்புகள் அகற்றுவதற்கும் நகராட்சி நிர்வாகம் சார்பில் வியாபாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் தாமோதரன், குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் ஏராளமான போலீசார் சாலையோரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். இதையடுத்து சாலையோரத்தில் இருந்த இரும்பு பேனர்களை முற்றிலுமாக அகற்றினார்கள். இதில் ஒரு சில இடத்தில் வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். நடைபாதை கடை வியாபாரிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.