வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஓட்டல் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தக் கூடாது. கலெக்டர் உத்தரவு

வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியை ஒட்டியுள்ள ஓட்டல் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தக் கூடாது என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-03-18 11:57 GMT
வேலூர்

வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியை ஒட்டியுள்ள ஓட்டல் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தக் கூடாது என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் சென்று இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இந்த வாகனத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பஸ் பஸ்களில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும் பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் வெங்கட்ராமன், தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாகனங்கள் நிறுத்தக் கூடாது

நிகழ்ச்சி முடிந்ததும் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அங்குள்ள தனியார் ஓட்டல் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் பழைய பஸ் நிலையத்திற்குள் செல்லும் வழியில் அதிக அளவு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை கண்காணித்த கலெக்டர், அந்த ஓட்டல் முன்பு இது போன்ற வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் ஓட்டல் முன்பு இந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்