சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா 2022 போட்டிகள்: ஓட்டல், விடுதி மேலாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா 2022 போட்டிகள் ஜூலை மாதம் நடைபெற உள்ளதையொட்டி ஓட்டல், விடுதி மேலாளர்களுடன் கலெக்டர் ராகுல்நாத் ஆலோசனை நடத்தினார்.
செஸ் ஒலிம்பியாட் திருவிழா போட்டிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா போட்டிகள் ஜூலை 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டிகளில் 150 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் மாமல்லபுரம் வருகை தரும்போது அவர்கள் தங்குவதற்காக 1,000 அறைகள் பதிவு செய்வதற்கு முன்னேற்பாடாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று மாமல்லபுரம் வருகை தந்து மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றின் பொது மேலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
போலீசாருக்கு அறிவுறுத்தல்
சர்வதேச வீரர்கள் அறைகளில் தங்க உள்ளதால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஓட்டல் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். செஸ் வீரர்கள் தங்கும் அறைகளை கிருமி நாசினி தெளித்து பாதுகாப்புடன் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு துறையின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு செஸ் வீரர்களுடன் அவர்களின் ரசிகர்கள், நண்பர்கள் என 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை வெளிநாட்டினர் வர வாய்ப்பு உள்ளதால் மாமல்லபுரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்தல், குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் செய்யவும் கலெக்டர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
செஸ் வீரர்கள் மாமல்லபுரம் வந்து அவர்கள் நாட்டுக்கு திரும்பும் வரை போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. விஷ்ணுபிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.