ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்; வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ராமாபுரம் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளில், ஆக்கிரமிப்பை அகற்றும்படி நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பெரியார் சாலை மற்றும் திருமலை நகர் ஆகிய பகுதிகளில் ராமாபுரம் ஏரி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்து அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளில், ஆக்கிரமிப்பை அகற்றும்படி நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இதுபற்றி அந்த வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறும்போது, “பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வீட்டு வரியும் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது இப்போது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டுவதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றனர்.
ஆனாலும் வருவாய்த்துறை அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 395 ஆக்கிரமிப்பு வீடுகளில் நோட்டீஸ் ஒட்டினர்.