சென்னை தீவுத்திடல் பகுதியில் இளையராஜா கச்சேரியால் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி, சென்னை தீவுத்திடலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை முத்துசாமி பாலம், மன்றோ சிலை வழியாக அண்ணாசாலைக்கு செல்பவர்கள் மற்றும் காமராஜர் சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக அண்ணாசாலை மற்றும் ஈ.வெ.ரா. சாலைக்கு செல்பவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இன்னிசை கச்சேரிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலையின் ஓரத்திலோ, நடைமேடையிலோ வாகனங்களை நிறுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.