ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப்-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப்-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
குரூப்-2 போட்டி தேர்வு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குரூப்-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்தர் முதல் துணை கலெக்டர் வரையும், வங்கிகளில் எழுத்தர் மற்றும் அதிகாரிகள், காவல் துறையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போன்ற அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இலவச பயிற்சி வகுப்பு
அதனைத்தொடர்ந்து குரூப்-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் படிக்கும் மாணவ -மாணவிகள் நல்லமுறையில் படித்து அனைத்து போட்டி தேர்வுகளிலும் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த வகுப்பில் குரூப்-2 போட்டி தேர்விற்காக சுமார் 95 பேர்கள் படித்து வருகின்றனர். வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பில் படித்து அரசு பணியில் சேர்ந்துள்ள ஒரு நபர் மற்றும் இந்த பயிற்சி வகுப்பில் படித்து வரும் மாணவி ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் கேடயங்கள் வழங்கி கலெக்டர் வாழ்த்தினார்.
தொழில்பயிற்சி நிலையம்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இந்த மையத்திற்கான தேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இந்த தொழில்பயிற்சி நிலையத்தில் உள்ள பணிமனையில் மாணவ -மாணவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகை பதிவேடு, இந்த பயிற்சி மையத்தில் படிக்கின்ற மாணவ -மாணவிகளுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மையத்திற்கு கூடுதலாக பயிற்சி உபகரணங்கள் வேண்டுமென தொழில்பயிற்சி நிலையத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.