அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; மாவட்ட விளையாட்டு அதிகாரி தகவல்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-17 22:05 GMT
ஈரோடு
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது-
விளையாட்டு விடுதி
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ், பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் இடவசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய பகுதிகளில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான தேர்வு
மேற்கண்ட விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வருகிற 23-ந் தேதி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் மாணவர்களுக்கான தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, கையுந்து பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, பளு தூக்குதல், கபடி, மேஜைபந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்-வித்தை ஆகிய போட்டிகளுக்கும், மாணவிகளுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், கையுந்து பந்து ஆகிய போட்டிகளுக்கும் தேர்வு நடக்கிறது.
இணையதளம்
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ-மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய மாவட்டத்திற்கு வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும். நேர்முகமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 0424 - 2223157 இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட விளையாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்