லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
திருச்சி கைலாசபுரம் பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் பாய்லர் நியாத் சாகியா (வயது 38). பாய்லர் ஆலை ஊழியரான இவர், அதே பகுதியில் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி நவல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அவருக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அலுவலக வணிகப் பிரிவு ஆய்வாளர் விக்டர் (42) ரூ.18 ஆயிரம் லஞ்சம் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நியாத் சாகியா, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆய்வாளர் கைது
அதனைத்தொடர்ந்து நியாத் சாகியாவிடம், ரசாயன பவுடர் தடவிய ரூ.18 ஆயிரத்தை கொடுத்து மின்வாரிய ஆய்வாளர் விக்டரிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று பகல் நவல்பட்டு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விக்டரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வீட்டில் சோதனை
பின்னர் அந்த அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருச்சி கே.கே.நகரில் உள்ள விக்டர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.