தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஏற்காட்டில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்காடு:-
ஏற்காடு ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 12 கடைகள் உள்ளன. சில கடைகளின் உரிமையாளர்கள் வணிக வளாக நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தே.மு.தி.க. சார்பில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து புகார் அளித்தபோது, தே.மு.தி.க.வினரை ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் தே.மு.தி.க.வினர், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காமராஜ், நிர்வாகி வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.