தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி
மல்லூர் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. அப்போது அலாரம் அடித்ததால் ரூ.25 லட்சம் தப்பியது.
பனமரத்துப்பட்டி:-
மல்லூர் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. அப்போது அலாரம் அடித்ததால் ரூ.25 லட்சம் தப்பியது.
ஏ.டி.எம். எந்திரம்
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டியில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியார் வங்கி உள்ளது. அதன் அருகிலேயே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் இரவு நேர பணிக்கு காவலாளி இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார்.
அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றார். அவர் எந்திரத்தின் கீழ் பகுதியில் இருந்த கதவு போன்ற பகுதியை உடைத்து திறந்தார். பின்னர் பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கரை உடைக்க முயன்றபோது, அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்தது. இதனால் மர்ம நபர் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ரூ.25 லட்சம் தப்பியது
இதனிடையே ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படுவது குறித்து வங்கி மேலாளரின் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவர் மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றதும், அலாரம் அடித்ததால் அவர் தப்பி ஓடியதும், இதனால் எந்திரத்தில் இருந்த ரூ.25 லட்சம் தப்பியதும் தெரியவந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.