மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம்
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
மலைக்கோட்டை
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.
இதற்காக நேற்று மதியம் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6.25 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக மலைக்கோட்டை மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தை வந்தடைந்தனர்.
தெப்ப உற்சவம்
பின்னர், தெப்பக்குளத்தில் தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 8.10 மணிக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் இரவு 12 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி, அம்பாள் வெளியே வந்தனர். அதைத்தொடர்ந்து நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப்பாறை வழியாக இரவு 12 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அதே தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தெப்பத் திருவிழாவையொட்டி தெப்பக்குளத்தை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளத்தை சுற்றியும் போடப்பட்டிருந்த அனைத்துத் தரைக்கடைகளும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.