‘ஹிஜாப்' அணிய ஐகோர்ட்டு தடை: முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கர்நாடகத்தில் முழு அடைப்பு

ஹிஜாப் அணிய தடை விதித்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடைபெற்றது.

Update: 2022-03-17 21:01 GMT
பெங்களூரு:

ஐகோர்ட்டு தீர்ப்பு

  கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி தீர்ப்பு வழங்கியது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில் கர்நாடகத்தில் முஸ்லிம் அமைப்புகளின் தலைமை அமைப்பாக செயல்படும், அமீர்-இ-ஷரியத்தின் தலைவரான இஸ்லாமிய மத குரு மவுலானா சாகிர் அகமதுகான் ரசதி, கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 17-ந் தேதி (நேற்று) ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். இதில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் பங்கேற்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடைகளை மூடினர்

  அதன்படி கர்நாடகத்தில் நேற்று முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதையொட்டி பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதாவது சிவாஜிநகர், திலக்நகர், ஜே.சி.ரோடு, பெரியார் நகர், கோல்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களின் கடைகளை மூடி இருந்தனர்.

  இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து குறைவாக காணப்பட்டன. அதே போல் மைசூரு, தார்வார், பல்லாரி, மங்களூரு, மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்தது.

நியாயம் கிடைக்கும்

  ஐகோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் கருத்து தெரிவித்தனர். இந்த முழு அடைப்புக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் மற்றும் சில தலித் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. 

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக முழு அடைப்பு நடத்தியதை சட்டசபையில் பா.ஜனதா கட்சி கண்டித்தது. அதே போல் அமைதி வழியில் போராடுவது முஸ்லிம்களின் உரிமை என்று காங்கிரஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்