யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

Update: 2022-03-17 20:50 GMT
மதுரை
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.
கோகுல்ராஜ் கொலை வழக்கு
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 
சாகும் வரை சிறை
இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை சிறப்பு கோர்ட்டு கடந்த 5-ந்தேதி தீர்ப்பளித்தது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கான தண்டனை விவரம் 8-ந்தேதி தெரிவிக்கப்பட்டது.
அப்போது வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஓரிரு நாள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனுக்களில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
கோகுல்ராஜ் இறந்தது தொடர்பான வழக்கில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பதிவுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தும், நாங்கள் தலைமறைவாக இருந்ததாலும் எங்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
ஆனால் இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களும்தான். இவர்கள் அனுமானத்தின் அடிப்படையில் சாட்சியம் அளித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு கீழ்கோர்ட்டு அளித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறி உள்ளனர். 
விரைவில் விசாரணை
இந்த மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

மேலும் செய்திகள்