போலீசாரின் ரோந்து பணியை உறுதி செய்யும் நவீனமுறையிலான “இ-பீட்” செயலி அறிமுகம்
போலீசாரின் ரோந்து பணியை உறுதி செய்யும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இ-பீட் செயலியை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தொடங்கி வைத்தார்.
மதுரை
போலீசாரின் ரோந்து பணியை உறுதி செய்யும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இ-பீட் செயலியை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தொடங்கி வைத்தார்.
இ-பீட் செயலி அறிமுகம்
மதுரை நகரில் ரோந்து செல்லும் போலீசார் அந்த இடத்திற்கு சென்று வந்ததாக அங்குள்ள பட்டா(பீட்) புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்வார்கள். அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து போலீசார் ரோந்து சென்றதை உறுதிபடுத்தி கொள்வார்கள். இது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே அந்த குறையை போக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இ-பட்டா என்ற இணையதள செயலியை மதுரை மாநகர போலீஸ் துறை உருவாக்கி உள்ளது. அதன்படி ஸ்மார்ட் போன் மூலம் கியூ ஆர் கோடு பதிவு செய்து ரோந்து சென்றது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த இ-பீட் செயலியை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா நேற்று அறிமுகப்படுத்தினார். புதிய செயலியானது போலீசாருக்கு மேலும் உதவும் வகையில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் ரோந்து செல்லும் இடத்தை எந்தவித காலதாமதமுனின்றி அறிய இயலும்.
காகித வேலை மிச்சம்
போலீசார் ரோந்து பணியை இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ் கமிஷனர் வரை உடனடியாக தெரிந்து கொள்ள இயலும். இவ்வாறு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் தாங்கள் செல்ல வேண்டிய பீட் அமைவிடத்திற்கு தவறாக செல்லும் பட்சத்தில் தானாகவே லேட்டிடியூட் மற்றும் லேங்டிடியூட் ஆகியவற்றை மாற்றி சரி செய்ய இயலும். மேலும் இதில் புதிய பீட் அமைவிடத்தையும் ஏற்படுத்தி கொள்ள இயலும். இதன் மூலம் காகித வேலையை நீக்கி போலீசாரின் பணியை கண்காணிக்க சிறந்த முறையில் உதவுகின்றது.
இந்த செயலியின் மூலம் சிறந்த போலீஸ் பணியை உறுதி செய்து குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்கும் மிகவும் உதவி செய்யும்.
போலீசாரின் ஆள் மாறாட்டம்
ஒவ்வொரு பீட் பணியாற்றிய அறிக்கைகளை தேதி மற்றும் நேரம் வாரியாக உருவாக்கலாம். குறிப்பாக இந்த நவீன செயலி முற்றிலும் பீட் போலீசாரின் ஆள் மாறாட்டத்தை தவிர்க்க பயன்படுகிறது. பீட் செய்யப்பட்ட தகவல்களின் அறிக்கைகள் ஏரியா வாரியாகவும மற்றும் போலீசார் வாரியாகவும் உடனடியாக பெறலாம்.
நவீனப்படுத்தப்பட்ட இந்்த முறையானது மதுரை நகரில் முக்கிய பகுதிகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் விரிவாக்க பகுதிகள் செயல்படுத்தப்பட்டு போலீஸ் பணி சிறந்த முறையில் உறுதி செய்யப்பட்டு, குற்ற நடவடிக்கை முற்றிலும் தடுக்கப்படும். மேலும் ரோந்து பணிக்கு வரும் போலீசாரிடம் சமூக விரோதிகள் மற்றும் குற்றங்களின் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை பொதுமக்கள், தெரிவிக்கும்படியும், போலீசாரின் வெளிப்படையான நடமாட்டத்தால் பூட்டிய வீடுகள் மற்றும் வயதான முதியோர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கத்துரை, ராஜசேகரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.