பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு
திருச்சி அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.32 ஆயிரம் திருடப்பட்டது.
திருச்சி
துறையூர் பாதர்பேட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவருடைய மனைவி வளர்மதி(வயது 44). இவருடைய மகள் பிரியங்காவுக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு துணையாக வளர்மதி மருத்துவமனையில் தங்கி இருந்தார்.
அப்போது வளர்மதி பையில் வைத்து இருந்த 7½ பவுன் தங்கச்சங்கிலி, ரூ.32 ஆயிரம், 2 செல்போன்கள், ஏ.டி.எம்.கார்டு, ஆதார் கார்டு ஆகியவை திருட்டு போனது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாதநிலையில், அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு வழக்கில் கிட்டத்தட்ட 1½ ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.