வட்டார போக்குவரத்து அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை
வட்டார போக்குவரத்து அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் டிரைவர்கள், சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வரும் 16 ஆட்டோக்களை விடுவிக்கக்கோரி பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் படித்த இளைஞர்கள் முதல் பெரும்பாலானோர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக டிரைவர்கள் ஆட்டோவுக்கு செலுத்த வேண்டிய காப்பீடு சான்று, புகை சான்று, தகுதி சான்று உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் புதுப்பிக்க தவறி விட்டார்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தீர்வு காண வேண்டும். எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோக்களை எவ்வித நிபந்தனையும் இன்றி, டிரைவர்களின் நலன் கருதி விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.