மதுரை
தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமியை தரிசனம் செய்தார். அவருக்கு பட்டர்கள் சிறப்பு தீபாராதனை காண்பித்து பிரசாதம் வழங்கினார்கள்.
பின்னர் அவர் அம்மன் சன்னதி வழியாக வந்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் சந்தித்தார். அப்போது உதயகுமாரின் மகளும், அம்மா சாரிடபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி சால்வை அணிவித்தார். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர். ஆனால் அவர் பதில் கூறாமல் காரில் புறப்பட்டு சென்று விட்டார்.