ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டர்: மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கியது

நெல்லை அருகே ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நேற்று தொடங்கியது.

Update: 2022-03-17 19:22 GMT
நெல்லை:
நெல்லை அருகே ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நேற்று தொடங்கியது. 

சுட்டுக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45), பிரபல ரவுடி. இவன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க் கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நீராவி முருகனை, திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் நெல்லை அருகே களக்காடு பகுதியில் பதுங்கியிருந்த நீராவி முருகனை போலீசார் பிடிக்க முயன்றபோது, வாளால் போலீசார் வெட்டி தப்ப முயன்றான். உடனடியாக போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டனர். இந்த என்கவுண்ட்டரில் அவன் ரத்த வெள்ளத்தில் இறந்தான். 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீராவி முருகன் உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட்டு விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி நாங்குநேரி கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராம் கிஷோர் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நேற்று அவர் தனது விசாரணையை தொடங்கினார். முதற்கட்டமாக நேற்று காலை மாஜிஸ்திரேட்டு ராம் கிஷோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு வந்தார். அங்கு நீராவி முருகனின் உடலை பார்வையிட்டார்.

எக்ஸ்ரே
அப்போது அங்கு இருந்த டாக்டர்கள், துப்பாக்கியால் சுடப்பட்ட  தோட்டா நீராவி முருகனின் உடலில் இருப்பது குறித்து மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உத்தரவுப்படி நீராவி முருகனின் உடல் பரிசோதனை கூடத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு உடலில் எந்த இடத்தில், எவ்வளவு ஆழத்தில் துப்பாக்கி தோட்டா இருக்கிறது? என்பதை துல்லியமாக கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவை எடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
பின்னர் மீண்டும் நீராவி முருகன் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மாலை 3.20 மணிக்கு டாக்டர்கள், பிரேத பரிசோதனையை தொடங்கினர். இந்த பரிசோதனை முழுவதும் மாஜிஸ்திரேட்டு ராம்கிஷோர் முன்னிலையில் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டது. நீராவி முருகன் உடல் பரிசோதனை மாலை 5.10 மணிக்கு முடிவடைந்தது. அதாவது 1 மணி நேரம் 50 நிமிடங்கள் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, அரசு ஆஸ்பத்திரிக்கு நீராவி முருகனின் உறவினர்கள் வந்தனர். பிரேத பரிசோதனை தொடங்குவதற்கு முன்பே நீராவி முருகனின் உடலை வாங்க மாட்டோம் என்று தங்களது நிலைப்பாட்டை போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டனர்.

உடல் தகனம்
பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேலும், உறவினர்கள் முன்னிலையில் நீராவி முருகனின் உடலை நெல்லையில் தகனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை போலீசார் உதவியுடன் நெல்லை வி.எம்.சத்திரம் மாநகராட்சி எரிவாயு தகன மேடைக்கு நீராவி முருகன் உடல் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்