சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
நச்சலூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலியானார். படுகாயம் அடைந்த நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நச்சலூர்,
சரக்கு வேன் மோதல்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா கொடியாலம் அருகே உள்ள கீழ சுப்பராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவருடைய மகன் கிருஷ்ணா (21). இவர் தனது நண்பரான கரிகாலனுடன் நெய்தலூர் காலனி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றனர்.
இந்தநிலையில், நச்சலூர் அருகே ஒத்தக்கடை-திருச்சி செல்லும் சாலையில் பால் சொசைட்டி அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணா மற்றும் கரிகாலனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கரிகாலனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.