பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி-4 பேருக்கு தீவிர சிகிச்சை

அரவக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த குழந்தைகள் உள்பட 4 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Update: 2022-03-17 18:45 GMT
அரவக்குறிச்சி, 
பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சபரிராஜா (வயது 55), டிரைவர். இவர் தனது மனைவி, மகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் வேடசந்தூர் அருகே உறவினர் வீட்டு விசேஷத்திற்கு காரில் சென்று விட்டு  சின்னதாராபுரத்திலுள்ள மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அரவக்குறிச்சி அருகே திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாகவுண்டனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
4 பேருக்கு தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 5 பேரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சபரிராஜா பரிதாபமாக இறந்தார். 
இதையடுத்து, படுகாயம் அடைந்த 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்