குடுமியான்மலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
குடுமியான்மலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
அன்னவாசல்:
சிகாகிரீஸ்வரர் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழைய தேர் பழுதாகி விட்டதால் 60 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் செய்ய பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அரசு மற்றும் பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் புதிதாக தேர் செய்யும் பணி தொடங்கி நிறைவடைந்த நிலையில் திருவிழா நடத்த அப்பகுதியினர் முடிவு செய்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
தேரோட்டம்
அதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
திரளான பக்தர்கள்
இதில் அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.
வெற்றி ஆண்டவர் கோவில் தேரோட்டம்
ஆலங்குடி அருகே குப்பகுடியில் வெற்றி ஆண்டவர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று சிறப்பு அலங்காரத்தில் வெற்றி ஆண்டவர் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது. பாத்தம்பட்டி, கல்யாணபுரம், மேலக்கோட்டை உள்ளிட்ட கிராமத்தார்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் ஆங்காங்கே பட்டாசு வெடித்து தேர் இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.