மார்க்கசகாயசாமி கோவில் தேரோட்டம்

குத்தாலம் அருகே மார்க்கசகாயசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2022-03-17 18:17 GMT
குத்தாலம்:
குத்தாலம் அருகே மார்க்கசகாயசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மார்க்கசகாயசாமி கோவில்
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்கசகாயசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
இறைவனை சவுந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும், துர்கா பரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சாமியை வழிபட்டு அகோரவடிவில் இருந்து சவுந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும், வழித்துணைநாதருக்கு இதய நோய் தீர்த்த தலமாகவும், பிரபல மகரிஷி முக்தி அடைந்த தளமாகவும் இது விளங்கி வருகிறது. 
இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாயசாமியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தளமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலில் சாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம். 
தேரோட்டம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில், பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் கடந்த 9-ந்தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.
இதனையொட்டி 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஞானசுந்தரம், தக்கார் உத்திராபதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்