வேலூரில் நடந்த பைனான்சியர், ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைதான 8 பேர் விடுவிப்பு

வேலூரை சேர்ந்த பைனான்சியர், ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைதான 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2022-03-17 18:08 GMT
வேலூர்

வேலூரை சேர்ந்த பைனான்சியர், ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைதான 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.

பைனான்சியர் கொலை

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜி.ஜி.ரமேஷ் (வயது 46), பைனான்சியர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள அவருடைய அலுவலகம் அருகே மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சதீஷ்குமார் என்கிற குப்பன் (35), சசிகுமார் (33), நாகராஜ் என்கிற முசல் நாகராஜ் (39), வெங்கடேசன் (39), சைதாப்பேட்டை சரத்குமார் (33), கேரளாவை சேர்ந்த ரகு (50) ஆகிய 6 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சூர்யா என்கிற சுரேஷ்குமார் (37), ரியல்எஸ்டேட் அதிபர். இவரை கடந்த 2010-ம் ஆண்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவருடைய அலுவலகத்தில் வைத்து மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து வேலூர் சைதாப்பேட்டை சரத்குமார், தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சதீஷ்குமார் என்கிற குப்பன், சசிகுமார், நாகராஜ் (36), சீனிவாசன் (36) பாலாஜி (37) ரவுடி மகா என்கிற மகாலிங்கம் (40) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 பேர் விடுவிப்பு

கடந்த 2015-ம் ஆண்டு ரவுடி மகா கல்லால் அடித்தும், கடந்த ஆண்டு வெங்கடேசன் உடல்நலக்குறைவாலும் உயிரிழந்தனர். அதனால் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த இரு வழக்குகளின் விசாரணை சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

வழக்குகளின் இறுதி விசாரணை நீதிபதி ரேவதி முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததால் 2 வழக்குகளில் கைதான 8 பேரையும் விடுவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்