நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான வழக்கில், நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கடலூர் கோர்ட்டு நடவடிக்கை எடுத்தது.

Update: 2022-03-17 18:00 GMT
கடலூர், 

நெல்லிக்குப்பம் மந்தகரையை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் அருண் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 8.8.2013 அன்று தனது நண்பர் கவுதமுடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ரோட்டோரம் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுதம் காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் இந்த விபத்தில் நஷ்ட ஈடு கேட்டு அருணின் தாய் லட்சுமி, அக்கா ஆனந்தி, தங்கை அனிதா ஆகிய 3 பேரும் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், இந்த விபத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப் பட்ட குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக, வட்டியுடன் சேர்த்து ரூ.24 லட்சத்து 37 ஆயிரத்து 9 வழங்க உத்தர விட்டார். ஆனால் இது வரை அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்