ஷேர் ஆட்டோக்கள் பெர்மிட் ரத்து

விழுப்புரம் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் ஷேர் ஆட்டோக்கள் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-03-17 17:46 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டுகள் பெருமாள், தெய்வகண்ணு, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் கலந்துகொண்டு பேசுகையில், ஏற்கனவே அறிவித்தவாறு விழுப்புரம் நகரில் ஷேர் ஆட்டோக்கள் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பழைய பஸ் நிலையம், காந்திசிலை, உழவர்சந்தை ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல வேண்டும். இந்த இடங்களை தவிர வேறு ஏதேனும் அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தினால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கை

அதேபோல் பயணிகள் இல்லை என்பதற்காக நடுவழியில் திருப்புவதும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரெயில்வே மேம்பாலம் முன்பாக ஷேர் ஆட்டோக்களை திருப்பக்கூடாது, பழைய பஸ் நிலையத்திற்குள் கட்டாயம் சென்று திரும்ப வேண்டும், தேவையற்ற இடங்களில் நிறுத்தக்             கூடாது, அதிகளவில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் கூடாது, செல்போன் பேசியபடியும், குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், சீருடை இல்லாமல் இருந்தாலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். போக்குவரத்து காவல்துறையின் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஷேர் ஆட்டோவின் பெர்மிட்டை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்