அபிராமேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-17 17:41 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் புகழ்பெற்ற முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா கடந்த 6-ந் தேதி தேரடி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
அதன் பின்னர் 8-ந் தேதி பிடாரி உற்சவம், யாகசாலை பூஜையும், 9-ந் தேதி கொடியேற்றம், அதிகாரநந்தி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 10-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சந்திரபிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், கயிலாய வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சாமி வீதிஉலாவும், நேற்று முன்தினம் மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள அந்த தேரை விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, வடம்             பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்                     பிடித்து இழுத்துச்சென்றனர்.
இந்த தேர், திருவாமாத்தூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அங்கு நடந்த சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இ.எஸ். கல்விக்குழும தலைவர் சாமிக்கண்ணு, மகாலட்சுமி பிளாசா உரிமையாளர் பிரகாஷ், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் சீனிவாசன், கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் உரிமையாளர் குணசேகரன், ரோட்டரி சங்க நிர்வாகி புதுராஜா, உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரம தலைமை நிர்வாகி ராமகிருஷ்ணப்பிரியா அம்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குபேரன் செட்டியார், உபயதாரர்கள் பாண்டுரங்கன், வேல்முருகன், சுப்பிரமணியன், வேல்குமார், முத்து               கிருஷ்ணன், வெங்கடேசன், கலியபெருமாள், அர்ச்சகர்கள் மகேஷ் குருக்கள், கிரிதர குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், திருவாமாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்