சித்தூரில் இருந்துபஸ்சில் கடத்திவந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல். 2 வாலிபர்கள் கைது
சித்தூரில் இருந்துபஸ்சில் கடத்திவந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக-ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று வேலூர் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ தலைமையில் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தூரில் இருந்து வேலூரை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி போலீசார் சோதனைச் செய்தனர். பஸ்சின் மேற்கூரையில் கிடந்த 2 மூட்டைகளை திறந்து பார்த்தனர். அதில், கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பஸ் கண்டக்டரிடம் நடத்திய விசாரணையில், பஸ்சில் பயணம் செய்யும் 2 வாலிபர்கள் அந்த மூட்டைகளை மேற்கூரையில் ஏற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இருவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்சாய் (வயது 20), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (26) என்றும், சித்தூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு 15 கிலோ கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 மூட்டைகளில் இருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.