2 வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை
பெரியகுளம் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனி:
பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரியகுளம் முன்னாள் ஆர்.டி.ஓ.க்கள் 2 பேர் உள்பட 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெரியகுளம் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, பெரியகுளம் மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் அழகர் ஆகிய 3 பேரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெரியகுளம் முன்னாள் தாசில்தார் ரத்தினமாலா, மண்டல துணை தாசில்தார் மோகன்ராம் ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்பேரில் ரத்தினமாலா, மோகன்ராம் ஆகிய இருவரும் நேற்று தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று ஆஜராகினர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடந்தது.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் மறு விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆஜரான 2 பேரும், இந்த சம்பவம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது