நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.;
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வளவனூர் குமாரகுப்பத்தை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது 45), அரசு பஸ் கண்டக்டர். கடந்த 26.1.1995 அன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் பணியில் இருந்தபோது லாரி மீது மோதிய விபத்தில் செந்தாமரைக்கண்ணன் பலியானார். இதுகுறித்து அச்சிரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே நஷ்ட ஈடு கேட்டு செந்தாமரைக்கண்ணனின் மனைவி வசந்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், பாதிக்கப்பட்ட செந்தாமரைக்கண்ணனின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதில் செந்தாமரைக்கண்ணனின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்தை வழங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.3 லட்சத்தை வழங்காமல் காலம் தாழ்த்தியது. நீதிமன்றம் வழங்கிய குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும், இந்த தொகையை வழங்காததால் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு உத்தரவின்படி அதன் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அதன் பிறகு அந்த பஸ், விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.