தாடிக்கொம்பு பேரூராட்சியில் ரூ.75 லட்சத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

தாடிக்கொம்பு பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-17 16:23 GMT
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக தாடிக்கொம்பு பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா தாடிக்கொம்பு பேரூராட்சி மறவப்பட்டி குழந்தை ஏசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து ெகாண்டு தாடிக்கொம்பு பேரூராட்சியை சேர்ந்த 1,126 பேருக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை வழங்கினார்.
முதல் பேரூராட்சி
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், தாடிக்கொம்பு பேரூராட்சியில் தொடங்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகள் படிப்படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். நகைக்கடன் தள்ளுபடியை பொருத்தமட்டில் தணிக்கையாளர்களின் தணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தணிக்கை முடிந்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நகைகள் திரும்ப வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதல் தண்ணீரை பெறும் வகையில் சுமார் ரூ.100 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு செயல்பட உள்ளது. இத்திட்டம் முடிவு பெற்றவுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் பங்கீடு செய்து அளிக்கப்படும் என்றார். 
பயணிகள் நிழற்குடை
முன்னதாக தாடிக்கொம்பு பஸ் நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதுபோல உண்டார்பட்டியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
விழாவில் தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வீராச்சாமி, தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் இன்னாசி, ராஜு, தாமஸ் மற்றும் செல்வராஜ், தாடிக்கொம்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தனபால், தேவி கலா, பெருமாள், இன்னாசியம்மாள், வசந்தாராணி, தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. துணைச்செயலாளர்கள் சண்முகம், அருள், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்