நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி பக்தர்கள் மொய் சமர்பித்து தரிசனம்

நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி பக்தர்கள் மொய் சமர்பித்து தரிசனம்

Update: 2022-03-17 16:15 GMT
நாமக்கல்:
நாமக்கல் நரசிம்ம சாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் சமர்பித்து தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம் நிகழ்ச்சி
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தேர்திருவிழாவையொட்டி நேற்று நாமக்கல் நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நரசிம்மர் மற்றும் அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பட்டாச்சாரியார்கள் திருமணம் நடத்தி வைத்தனர்.
பக்தர்கள் மொய் சமர்பித்தனர்
தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்பிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் சமர்பித்து சாமியை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் கோட்டை நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்