ஒப்பந்தப்பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

ஒப்பந்தப்பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-17 15:55 GMT
உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப்பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனை
உடுமலை அரசு மருத்துவமனையில் துப்புரவுபணி, எலக்ட்ரீசியன், செக்யூரிட்டி, குடிநீர் பணி, பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனத்தினர் இந்த பணியிடங்களுக்கு ஒப்பந்தப்படி பணியாளர்களை பணியமர்த்தியுள்ளனர்.
 இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு அந்த நிறுவனத்தின் சம்பளம் சரியாக வருவதில்லை என்று இந்த பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
இதுசம்பந்தமாக பல முறை பிரச்சனைகள் நடந்து வந்துள்ளது. தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் இந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் 44 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலரை இந்த தனியார் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
திடீர் வேலை நிறுத்தம்
இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப்பணியாளர்கள், சம்பளப்பிரச்சினை மற்றும் பணியாளர்கள் பணியிடைநீக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி நேற்று  பணிகளை புறக்கணித்து விட்டு, மருத்துவ மனை வளாகத்தில் உட்கார்ந்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
அத்துடன் உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தனிடம் கோரிக்கை மனுவைக்கொடுத்தனர்.

மேலும் செய்திகள்