திருப்பூர் மாநகராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
திருப்பூர் மாநகராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வருமுன் காப்போம் திட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டுக்கு உட்பட்ட பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
மக்களுக்கு நோய் வரும் முன் அதை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்க, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறலாம்.
மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனை, சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனைகளை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி மூலமாக உடல் நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவ முகாம், மனநல மருத்துவம், கர்ப்பிணி மற்றும் பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அடையாள அட்டை வழங்கப்படும். மாநகர மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பணி ஆணை
இதைத்தொடர்ந்து 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கும் முகாமை அமைச்சர், மேயர், துணை மேயர் தொடங்கி வைத்தனர். பின்னர் மின்வாரியத்தில் பணியாற்றிய ஊழியர்கள் விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கு பணி ஆணையை அமைச்சர் வழங்கினார். இதில் மாநகர் நல அதிகாரி பிரதீப் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் கவிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.