முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணதிர முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
பழனி:
பங்குனி உத்திர திருவிழா
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான இன்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, ஸ்கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன.
திருக்கல்யாணம்
தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீர வேல் முருகனுக்கு அரோகரா’, ‘ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா’ என்று விண்ணதிரும் வகையில் கோஷமிட்டனர்.
தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மற்றும் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.