கல்லட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது 7 மாணவர்கள் படுகாயம்

கல்லட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-17 15:27 GMT
ஊட்டி

கல்லட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கல்லூரி மாணவர்கள் 

நாமக்கல் மாவட்டம் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. பொருளாதாரம் படித்து வரும் 7 மாணவர்கள் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங் களை சுற்றி பார்த்துவிட்டு முதுமலை செல்ல தங்கள் காரில் புறப்பட்டனர். காரை ராஜ்குமார் (வயது 21) என்பவர் ஓட்டினார். 

அவர்கள் கல்லட்டி மலைப்பாதையில் முதுமலையை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் வேகமாக சென்றதாக தெரிகிறது. 23-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 

பள்ளத்தில் கவிழ்ந்தது

பின்னர் அந்த கார் சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காருக்குள் இருந்த கல்லூரி மாணவர்கள் அய்யோ... அம்மா... என்று அலறினார்கள். பின்னர் அந்த கார் உருண்டபடி சென்று அங்கு நின்ற ஒரு மரத்தில் மோதி நின்றது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 7 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

7 பேர் படுகாயம்

தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டிச்சென்ற ராஜ்குமார், நாமக்கல் பாலப்பட்டியை சேர்ந்த அபிஷேக் (19), தென்னரசு (19), கோகுல் (19) உள்பட 7  பேருக்கு படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

 அவர்களுக்கு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கல்லட்டி மலைப்பாதை 36 அபாயகரமான கொண்டை ஊசி வளைவு களை கொண்டது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வெளிமாநில, பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி நாமக்கல் மாணவர்கள் வந்த கார் எப்படி சென்றது என்பது தெரியவில்லை. 

போலீசார் விசாரணை

இது குறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஊட்டியில் அடுத்த மாதம் முதல் கோடை சீசன் தொடங்க உள்ளது. எனவே இங்கு வரும் வெளிமாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று விபத்துக்குள் சிக்குவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்