பழனி முருகன் கோவில் அலுவலகம் முற்றுகை

பழனி முருகன் கோவில் பகுதியில் உள்ள மண்டபத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஒரு சமுதாய அமைப்பினர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-17 15:07 GMT
பழனி: 

பழனி முருகன் கோவில் வெளிப்பிரகார பகுதியில் ஒரு சமுதாயத்துக்கான மண்டபம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் அந்த சமுதாய அமைப்பு சார்பில் அந்த மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருவதால் அந்த சமுதாய அமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவிலில் உள்ள அந்த மண்டபத்தை பயன்படுத்தவும், தண்ணீர் பந்தல் அமைக்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அந்த சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கோவில் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண்டபத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், மண்டபத்தை பயன்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் கோவில் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதால் தற்காலிகமாக அந்த மண்டபத்தை பயன்படுத்த அனுமதி வழங்கினர். 

அதைத்தொடர்ந்து அந்த சமுதாய அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்