திருநின்றவூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டிட பூமி பூஜை
திருநின்றவூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டிட பூமி பூஜை நேற்று நடைபெற்றது.;
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1964-ம் ஆண்டு முதல் தாய்சேய் நல மையமாக இருந்து வந்தது. அதன் பின்னர், 1998-ம் ஆண்டு முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக பழைய கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கொசவன்பாளையம், திருநின்றவூர், லட்சுமிபுரம், தாசர்புரம், நெமிலிச்சேரி ஆகிய 5 துணை சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த 75 ஆயிரம் பொதுமக்களுக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
அன்றாடம் 300 பேர் வரை இந்த சுகாதார மையத்துக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாதத்திற்கு 15 முதல் 20 பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கையை ஏற்று, ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மற்றும் தொகுதி மேம்பாட்டு திட்ட சேமிப்பு நிதி ரூ.32 லட்சம் என ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்காக திருநின்றவூர் பகுதியில் 3 ஆயிரத்து 200 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். இந்த பணிகள் 8 மாதத்துக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் உஷாராணி ரவி, துணைத்தலைவர் சரளா நாகராஜி, திருநின்றவூர் நகராட்சி கமிஷனர் கணேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், திருநின்றவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கீதா, திருநின்றவூர் நகர தி.மு.க செயலாளரும் 14-வது வார்டு உறுப்பினருமான தி.வை.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.