அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி திருத்தணி ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;

Update: 2022-03-17 14:14 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி வரவேற்றார், ஒன்றிய குழு துணைத் தலைவர் இ.என். கண்டிகை ரவி முன்னிலை வகித்தார்.

ஒன்றிய குழு கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கவுன்சிலர்கள் எழுந்து, வரவு செலவு கணக்குகள், திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு புத்தகத்தில் 2022-க்கு பதில் 2021 என்று ஆண்டை தவறாக குறிப்பிட்டு வழங்கியுள்ளனர். அரசு வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட 11 கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகளை கண்டித்து தி.மு.க. ஒன்றிய குழுத்தலைவர் தங்கதனமும் வெளிநடப்பு செய்து கவுன்சிலர்களுடன் வந்து நின்று தன்னுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினார். ஆளும் கட்சி ஒன்றிய குழு தலைவர் கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்