நூதன முறையில் ரூ1 லட்சத்து 52 ஆயிரம் மோசடி
பெண் உள்பட 2 பேரிடம் நூதன முறையில் ரூ1 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்
பெண் உள்பட 2 பேரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு வாடகைக்கு...
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ரூபிரேனியஸ் (வயது 69). இவர் தனது வீட்டை வாடகைவிட நினைத்துள்ளார்.
அதுகுறித்து ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அந்த விளம்பரத்தை பார்த்த மர்மநபர் ஒருவர் ரூபிரேனியசை தொடர்பு கொண்டார். அவர் தன்னை ராணுவவீரர் என்றும் வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதை நம்பிய அவர் வீட்டின் விவரம் மற்றும் வாடகை தொகை விவரங்களை தெரிவித்துள்ளார். அந்த மர்மநபர் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து வாடகை செலுத்துவதாக தெரிவித்தார்.
அதற்காக ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வதாக ரூபிரேனியஸிடம் தெரிவித்து, வங்கி விவரங்களை பெற்றுள்ளார்.
பின்னர் அவருக்கு தெரியாமல் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.62 ஆயிரத்தை மர்மநபர் அபேஸ் செய்து விட்டார். தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தான் மர்மநபர் நூதன முறையில் ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலியான முகநூல் கணக்கு
குடியாத்தம் நகரை சேர்ந்த கப்பலில் என்ஜினீயராக வேலைபார்ப்பவர் பிரதீப் (34). இவரது நண்பர் பெயர் கொண்ட முகநூல் கணக்கில் ஒரு பதிவு போடப்பட்டது.
அதில் எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பணம் கொடுத்து உதவுங்கள் என்று வங்கிக்கணக்கு எண்ணுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப்பார்த்த பிரதீப் தனது நண்பரின் குழந்தைக்கு உதவ நினைத்தார். இதையடுத்து அந்த வங்கிக் கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.90 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார்.
பின்னர் அவருக்கு அந்த முகநூல் கணக்கு போலியானதும் அதில் இடம்பெற்றிருந்த பதிவு உண்மையற்றதும், நண்பர் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கிய மர்மநபர் நூதன முறையில் பணத்தை ஏமாற்றி பெற்றதும் தெரியவந்தது.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.