வளர்ச்சி திட்டப்பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-17 12:50 GMT
திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.

உதவி இயக்குனர் ஆய்வு

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் சென்று பார்வையிட்டு அய்வு செய்தார். 

குட்டக்கரை ஊராட்சியில் அமடன்கொல்லை பகுதியில் ஒன்றிய பொது நிதி மூலம் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் உலர் களம் அமைக்கும் பணியினையும், அதே ஊராட்சியில் பட்டறைக்காடு பகுதியில் உபரி நிதித் திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் உலர்களம் அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்து அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி பராமரிக்க அறிவுறுத்தினார். 

தார் சாலை

கோவிலூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் அம்பேத்கர் நகர் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை ஆய்வு செய்தார். 

ஜமுனாமரத்தூர் போளூர் சாலை முதல் தொம்பரெட்டி சாலை வரை அமைக்கப்பட்டு உள்ள ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலான தார் சாலை பணியினையும் பார்வையிட்டார். 

கோவிலூர் மேல் அத்திப்பட்டு கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய திறந்த வெளிக்கிணறு, மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிலுவைப் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். 

அதே கிராமத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள பழங்குடியின பயனாளிக்கான புதிய குடியிருப்பு வீட்டினை அவர் பார்வையிட்டார். 

ஆய்வு கூட்டம்

முன்னதாக ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

உதவி இயக்குனர் தலைமை தாங்கி, அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார். 

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், சக்திவேல், உதவி பொறியாளர் அரங்கராஜன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் வீரபத்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்