திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் நிலம் ஏலம்
திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் நிலத்தை செயல் அலுவலர் பொது ஏலத்தை நடத்தி வாகன நிறுத்த கட்டண வசூலிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில் கிரிவல பாதை பஸ் நிலையம் அருகே உள்ள சுப்பையா சுவாமி மடம் எதிரில் மலை பகுதியையொட்டி கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடத்தில் 20 ஆண்டு காலமாக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகம் முழுவதுமுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். வருமானமின்றி உள்ள கோவில்களில் அந்த கோவிலுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கேற்ப பொது ஏலம் நடத்தி கோவிலுக்கு வருமானத்தை ஈட்டி கொள்ள அறிவுறுத்தியிருந்தார். திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் அருகே கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடத்தில் அறநிலையத் துறையின் ஒப்புதல் பெற்று வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க உரிமம் பெற பொது ஏலம் கோவில் அலுவலகத்தில் கோவில் தக்கார் சக்திவேல், செயல் அலுவலரும் பொது ஏல சிறப்பு அலுவலருமான ஆ.குமரன், செயல்அலுவலர் மா.வெள்ளைசாமி ஆகியோர் முன்னிலையில் சரக ஆய்வர் பாஸ்கரன் கண்காணிப்பில் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் பொது ஏலத்தை நடத்தினார். யுவராஜா என்பவர் ரூ. 82 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். 3 மாதத்திற்கு வாகன நிறுத்த கட்டண வசூலிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.