வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்படி கேட்டதால் வெல்டர் தற்கொலை
மதுராந்தகத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்படி வங்கி மேலாளர் கேட்டதால் வெல்டர் தற்கொலை செய்து கொண்டார்.
வங்கியில் கடன்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 32). வெல்டர். இவர் மதுராந்தகம்- சூனாம்பேடு சாலை கடப்பேரியில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன் ரூ.4 லட்சம் வாங்கி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்த கடன் தொகையில் 23 மாத காலம் கடன் தொகை செலுத்தி இருந்தார்.
கடந்த மாதம் கடன் தொகை செலுத்தவில்லை. பத்மநாபன் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஒரு வருட காலமாக சென்னை தரமணியில் குடும்பம் நடத்தி வருகிறார்.
பத்மநாபனின் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வங்கியின் மேலாளர் கல்பட்டுக்கு சென்று மகன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் படி கேட்டதாக தெரிகிறது. இது குறித்து பத்மநாபனிடம் அவரது தாயார் கூறியுள்ளார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்து போன பத்மநாபன் நேற்று தரமணியில் உள்ள வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சென்னை தரமணியில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் உடலை அங்கிருந்து எடுத்து சென்று தனியார் வங்கியின் முன்னால் சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜின்னாபாஷா, இளங்கோ, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வங்கி மேலாளர் தனது தலைமையிடம் பேசுவதாக தெரிவித்ததையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.