கொல்லிமலையில் தொழிலாளி திடீர் சாவு குடிபழக்கத்தை நிறுத்த கயிறு கட்ட வந்தவர்

கொல்லிமலையில் தொழிலாளி திடீர் சாவு குடிபழக்கத்தை நிறுத்த கயிறு கட்ட வந்தவர்;

Update: 2022-03-17 11:40 GMT
சேந்தமங்கலம்:
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 50). தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி தனது நண்பர்கள் 5 பேருடன் கொல்லிமலைக்கு வந்தார். அப்போது அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஒரு கொட்டகையில் அனைவரும் தங்கினர்.
இந்த நிலையில் சண்முகசுந்தரம் தனக்கு குடிப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்றும், அதை நிறுத்த இங்கு கயிறு கையில் கட்டி விட்டு செல்ல வேண்டும் என்று நண்பர்களிடம் தெரிவித்தார். அதற்கு நண்பர்கள் அடுத்த நாள் காலையில் கயிறு கட்டி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பின்னர் மறுநாள் சண்முகசுந்தரத்தை எழுப்பியதில் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் திடீரென இறந்து கிடந்தார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசாரின் விசாரணையில் சண்முகசுந்தரம் கொல்லிமலைக்கு வரும்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகவும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். தொழிலாளி திடீர் சாவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்