கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-17 11:37 GMT
பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 
இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல் 

பொள்ளாச்சி அருகே ஆனைமலை, திவான்சாபுதூர், கிழவன்புதூர் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திவான்சாபுதூர் நடுகன்னியம்மன் கோவில் அருகில் பாப்பாத்தி பாலம் மறைவான பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆனைமலை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் ஆனைமலை பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மனோஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே வேலாந்தவளம் ரோட்டில் முத்துமலை முருகன் கோவில் சந்திப்பு பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த உமர் (43) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கைதான உமரிடம் இருந்து கார் மற்றும் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்