தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
மதுரை திருமங்கலத்திற்குட்பட்ட ஊமச்சிகுளத்திலிருந்து திருப்பாலைக்கு குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பஸ்சுக்காக பல மணி நேரம் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால விரயம் ஏற்பட்டு தங்களின் அன்றாட வேலை பாதிக்கப்படுகின்றது. இப்பகுதி மக்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியன், திருமங்கலம்.
பாலம் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் தலைமலையான் கோவில் மலையடிவாரத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பகுதிக்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் காட்டுப்பாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. உரங்கள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாாிமுத்து, தம்பிபட்டி.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாநகராட்சி 8-வது வார்டு மீனாட்சியம்மன் நகர்மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்து இருப்பதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகவேல், மதுரை.
சீரான மின்வினியோகம்
விருதுநகர் மாவட்டம் டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோக மின்சாரம் குறைந்த மின்னோட்ட திறன் கொண்டதாக உள்ளது. இதனால் அனைத்து மின் உபயோகப் பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றது. மேலும் தொழில் வளங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் கூடுதல் மின்னோட்ட திறன் கொண்ட மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், டி.கிருஷ்ணாபுரம்.