51,687 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது

குமரி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 51,687 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி இன்று (வியாழக்கிழமை) முதல் செலுத்தப்பட உள்ளது.

Update: 2022-03-16 21:23 GMT
நாகர்கோவில்: 
குமரி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 51,687 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி இன்று (வியாழக்கிழமை) முதல் செலுத்தப்பட உள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2-ந் தேதியில் இருந்து முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதை தாண்டியவர்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 60 வயதை தாண்டியவர்களுக்கு 3-வது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10-ந் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை 12 லட்சத்து 11 ஆயிரத்து 454 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 9 லட்சத்து 85 ஆயிரத்து 870 பேருக்கு 2-வது கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் 14 ஆயிரத்து 433 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 15 வயதை தாண்டியவர்களுக்கு இதுவரை 77 ஆயிரத்து 343 மாணவ-மாணவிகளுக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 55 ஆயிரத்து 328 பேருக்கு 2-வது கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு இருக்கிறது.
கோர்பேவேக்ஸ்
இந்தநிலையில்      தற்போது 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 51 ஆயிரத்து 687 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதற்காக 56 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளன. அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) முதல் இந்த தடுப்பூசிகள் பள்ளிகள் வாயிலாக மாணவ-மாணவிகளுக்கு செலுத்தப்பட உள்ளன.
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் 12- 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசி கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டு 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போட வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்