ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு விற்பனையாளர் பணி இடைநீக்கம்
அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக தாதகாப்பட்டி விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:-
அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக தாதகாப்பட்டி விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, லைன் மேடு, அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் 14 பேர் கொண்ட கூட்டுறவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். மொத்தம் 30 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 20 கடைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் தாதகாப்பட்டி வேலுத்தெருவில் உள்ள ரேஷன் கடையில் 140 கிலோ அரிசி, 160 கிலோ கோதுமை இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடையின் விற்பனையாளர் கிருஷ்ணராஜூக்கு ரூ.7 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை பொன்னி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மலர்விழி பிறப்பித்தார்.
அபராதம் விதிப்பு
இதற்கிடையே தாதகாப்பட்டி கேட் பெரியார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ரேஷன்கடையில் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் தலைமையிலான குழுவினர் அந்த கடைக்கு விரைந்து சென்றனர். ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தப்பிச்சென்றது. அந்த கடையில் பொருட்கள் இருப்பு சரிபார்க்கப்பட்டது.
அப்போது அரிசி 260 கிலோ அதிகமாகவும், பாமாயில் ஒரு லிட்டர் குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து விற்பனையாளர் சபாரினுக்கு ரூ.6 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டது. சபாரின் கூடுதலாக பணிபுரிந்து வரும் ரேஷன் கடைகளிலும் பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சபாரினுக்கு ரூ.14 ஆயிரத்து 875 அபராதம் விதிக்கப்பட்டதுடன், பணி இடைநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ரேஷன் கடைகளில் அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி ஆய்வால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.